SELANGOR

மக்கள் தரமான, வசதியான மற்றும் பாதுகாப்பான வீடுகளைப் பெற்றிருப்பதை உறுதி செய்ய ருமா சிலாங்கூர் கூ 3.0 வீட்டுத் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 21: ருமா சிலாங்கூர் கூ 3.0 வீட்டுத் திட்டம் உட்பட பல திட்டங்கள் மூலம் அதிகமான மக்களுக்குத் தரமான, வசதியான மற்றும் பாதுகாப்பான வீடுகள் இருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

இதைத் தவிர, ஸ்மார்ட் சேவா திட்டம் போன்ற பிற திட்டங்கள் மக்களுக்குச் சொந்தமான வீடு மட்டுமின்றி வசதியான வசிப்பிடத்தையும் உறுதி செய்வதற்காக உருவாக்கப் பட்டன என்றார் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

“அதனால்தான் நாங்கள் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம், மேலும் பல திட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

மேலும் விவரித்த அமிருடின், ருமா சிலாங்கூர் கூ 3.0 வீட்டுத்திட்டம் கட்டுப்பாடான விலையில் அதாவது RM250,000 மற்றும் அதற்கும் குறைவாக உள்ளது என்றார்.

“சுமார் 60,000 யூனிட்டுகளுக்கான தொகை அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமார் 4,500 யூனிட்கள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 7,000 இன்னும் கட்டுமானத்தில் உள்ளன.  மீதமுள்ளவை மேம்பாட்டு திட்ட அனுமதியைப் பெற்றுள்ளன” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 1 வரை 83,603 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் கூ ரூமா 3.0 வீட்டுத் திட்டத்தின் மூலம் 60,000 குடியிருப்புகளை உருவாக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என வீட்டுத் துறை எஸ்கோ ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

ரூமா சிலாங்கூர் கூவை சொந்தமாக வாங்க  முடியாத குறைந்த மற்றும்  நடுத்தர வருமானம் கொண்ட பிரிவினர் ஸ்மார்ட் சேவா திட்டம் வழி பயன் பெறலாம்..

அத்திட்டத்தின்  படி  குறைந்தபட்ச வாடகை காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.  ஒரு  குறிப்பிட்ட யூனிட்டில் வசிக்கும்  ஒருவர் வாடகை செலுத்திய தொகையில் 30 சதவிகிதம் வாடகை  அந்த  வீட்டிற்கான  முன் பணமாக ஏற்றுக்கொண்டு , தொடர்ந்து செலுத்தப்படும் பணத்தை  வீட்டுக்கு தவணை கட்டணமாக  ஏற்றுக்கொண்டு  குறிப்பிட்ட காலத்திற்கு பின்  வீட்டை அவருக்கு  உரிமையாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.


Pengarang :