SELANGOR

ரவாங் தொகுதியில் வெ.400,000 செலவில் புதிய மண்டபம்- சட்டமன்ற உறுப்பினர் சுவா தகவல்

ஷா ஆலம், ஜூன் 22- ரவாங்கிலுள்ள கம்போங் சுங்கை பாக்காவில் திறந்த
வெளி மண்டபம் நிர்மாணிப்பதற்காக 400,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக
ரவாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

புரோஜெக்ட் சிலாங்கூர் பென்யாயாங் (பி.எஸ்.பி.) எனும் திட்டத்தின் கீழ்
நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும்
ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மண்டபம் பூர்த்தியானவுடன் இப்பகுதியில் உள்ள மூன்று
குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் பயன் பெறுவதற்குரிய
வாய்ப்பு கிட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கூடைப்பந்து மைதானம் மற்றும் இதர அடிப்படை வசதிகளை
உள்ளடக்கிய இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்டு
மாதம் தொடங்கப்படும். அதற்கு முன்னதாக, அந்த மண்டபம்
நிர்மாணிக்கப்படவுள்ள பகுதியை நாங்கள் பார்வையிடவுள்ளோம் என
அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் நிலவும் பொது மண்டபம் இல்லாத
பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இவ்விடத்தைச் சுற்றியுள்ள கன்றி ஹோம், சவுஜானா ரவாங் மற்றும்
கோத்தா எமரால்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும்
பயன் பெறும் வகையில் இந்த மண்டப நிர்மாணிப்பு அமையும் என்றார்
அவர்.

இப்பகுதி மக்கள் இந்த மண்டபத்தை திருமணம், விருந்து மற்றும் இதர
நிகழ்வுகளுக்குக் குறைந்த வாடகையில் பெற முடியும் என்றும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :