NATIONAL

மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் கெஅடிலான் மகளிர்ப் பிரிவு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலை எதிர்கொள்ள கெஅடிலான் கட்சியின் மகளிர்ப் பிரிவு தயாராக
உள்ளது.

முக்கியத் தொகுதிகளை இலக்காகக் கொண்டு மகளிர்ப் பிரிவின் தேர்தல்
இயந்திரம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கெஅடிலான் தேசிய
மகளிர்ப் பிரிவுத் தலைவி ஃபாட்லினா சீடேக் கூறினார்.

இந்த தேர்தலில் 30 விழுக்காட்டு பிரதிநிதித்துவத்தை (பெண்
வேட்பாளர்கள்) நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். நமது பணியில்
தீவிரம் காட்டுவதற்கு ஏதுவாக அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும்
ஒற்றுமைத் தலைமைத்துவம் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என
எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு கெஅடிலான் கட்சியின் தற்காப்பு வழக்கறிஞர் திட்டத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் தேர்தல்
இயந்திரத்தை மாநில கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
முன்னதாக தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் தவிர்த்து பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், கிளந்தான்,
திரங்கானு ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல்
நடைபெறவுள்ளது.

மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக சட்டமன்றத்தை இன்று
கலைக்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜ் கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கினார்.


Pengarang :