NATIONAL

சிலாங்கூர் மாநிலத்தின் RM18 பில்லியன் முதலீட்டு மதிப்பு சிறந்த சாதனையாகும்

ஷா ஆலம், ஜூன் 25: சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த முதலீட்டு சாதனை  2018ல் பதிவான RM18 பில்லியன்  என்பதாகும்.  இந்த முதலீட்டு மதிப்பு 30 ஆண்டுகளில் சிறந்தது என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியிடம் இருந்து மாநில நிர்வாகத்தை பொறுப்பேற்ற பிறகு இந்த வெற்றி கிடைத்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நீங்கள் சிலாங்கூரின் மந்திரி புசாராக இல்லாத  நேரத்தில், எங்களின் சிறந்த முதலீட்டு சாதனை RM18 பில்லியன் ஆகும். முகமட் அஸ்மின் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைக் கவனித்து வந்தவர், ஆனால் அவருக்கு, இங்கு  முதலீடு என்ன என்று தெரியவில்லை என்பதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

“அவர் மந்திரி புசாராக இருந்தபோது, முதலீட்டின் மதிப்பு RM 5 பில்லியனுக்கும் RM7 பில்லியனுக்கும் இடையில் இருந்தது,” என்று நேற்றிரவு டத்தாரான் மெர்டேகாவில் சிலாங்கூர் ஹராப்பான் தேர்தல் எந்திரத்தை துவக்கி வைக்கும் போது அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அவர் 2018 இல் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டது தொடர்பான முகமது அஸ்மின் கருத்தையும் விமர்சித்தார்.

ஆதரவாளர்களிடமிருந்து உற்சாகத்தைப் பெறுகையில், “முகமது அஸ்மின் மறந்துவிடாதீர்கள், ஆறு மாதங்களுக்கு முன்பு உங்களை தோற்கடித்தவன் நான் தான்” என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் (GE-15) நடைபெற்ற பொதுத் தேர்தலில், 12,729 வாக்குகள் பெரும்பான்மையுடன் முகமட் அஸ்மின் மூன்று தவணைகளாக வைத்திருந்த இடத்தை அமிருடின் கைப்பற்றினார்.


Pengarang :