NATIONAL

மாநிலத் தேர்தலில் 51 தொகுதிகளை வெல்ல சிலாங்கூர் ஹராப்பான் கூட்டணி இலக்கு

புத்ராஜெயா, ஜூன் 26 – எதிர்வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படும் தேர்தலில் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் 51ஐ
கைப்பற்ற சிலாங்கூர் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

மாநிலத்தை மேம்படுத்துவதில் சிறப்பான அடைவு நிலையை சிலாங்கூர்
அரசு நிர்வாகம் பதிவு செய்துள்ளதன் அடிப்படையில் இந்த நம்பிக்கையை
தாங்கள் வெளிப்படுத்துவதாக மாநில ஹராப்பான தேர்தல் இயக்குநர்
முகமது யாஹ்யா மாட் ஷாரி கூறினார்.

இலவசக் குடிநீர்த் திட்டம், காப்புறுதி பாதுகாப்புத் திட்டம், இலவச
தக்காபுல்,சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம், மூத்த குடிமக்கள்
நட்புறவுத் திட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்
படுத்திய சிலாங்கூர் நிர்வாகத்தின் சாதனைகளை வாக்காளர்கள்
கவனத்தில் கொள்வர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

மேலும், ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான
ஒத்துழைப்பு, ஒற்றுமை அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை
மேலும் வலுப்படுத்தும் என்பதோடு அதிக வாக்குகளைக் கவர்தற்குரிய
வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள காம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற
கெஅடிலான் கட்சியின் சிறப்பு தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில்
பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, கோம்பாக் செத்தியா மற்றும் கோத்தா டாமன்சாரா
உள்ளிட்ட தொகுதிகளின் பங்கீடு தொடர்பில் தொடர்ந்து பேச்சு வார்த்தை
நடத்தப்பட்டு வருவதாக முகமது யாஹ்யா சொன்னார்.

இந்த தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு
வரும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் சம்பந்தப்பட்ட செயல்குழு அளவிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து தற்போது
தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றார் அவர்.


Pengarang :