NATIONAL

தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடுங்கள், உண்மையை மக்களுக்கு எடுத்துரையுங்கள்- அமிருடின் வலியுறுத்து

கிள்ளான், ஜூன் 26- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை
எதிர் கொள்வதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான்
நேஷனல் ஒற்றுமை தேர்தல் இயந்திரம் உடனடியாக முடுக்கி விடப்பட
வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும்
கண்மூடித்தனமான தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏதுவாக
உண்மையை எடுத்துரைக்கும் சாதனமாக ஒற்றுமை தேர்தல் இயந்திரம்
செயல்பட வேண்டும் என்று மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

நமது இயந்திரம் உடனடியாக முடுக்கி விடப்பட வேண்டும். அவர்கள்
சிசுகிசுப்பதிலும் ஏமாற்றுவதிலும் திசை திருப்புவதிலும
கைத்தேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.

அவர்கள் கூறுவதெல்லாம் உண்மை அல்ல. பொய்தான். சாதனைக்கானஅடைநிலை அல்ல. தோல்விதான். அவர்கள் மக்கள் மத்தியில்
திருப்தியற்ற மற்றும் மகிழ்ச்சியற்ற சூழலை உருவாக்க விரும்புகின்றனர்
என்ற அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் ராக்கான் மூடா மையத்தில்
நடைபெற்ற சுங்கை காண்டீஸ் தொகுதி நிலையிலான ஹராப்பான்-
பாரிசான் தேர்த்ல் இயந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில்
அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்தையும் நாட்டையும் அழிக்கும் பேராசை குணம் கொண்ட
தரப்பினரின் கைகளில் சிலாங்கூர் சென்று விடாமல் தடுக்கப்பட வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.

அவர்கள் 18 மாதங்கள் நாட்டை ஆண்டது போதும், திக்கு தெரியாத
நிலைக்கு கொண்டுச் சென்று விட்டனர். மக்களை குழப்பத்திலும் ஆழ்த்தி விட்டனர். மக்களின் விவேகம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான நாம் வெறுமனே இருந்து விட முடியாது என்றார் அவர்.


Pengarang :