NATIONAL

உயர்கல்விக் கட்டணத் திட்டத்தின் கீழ் 502 இந்திய மாணவர்களுக்கு வெ.20 லட்சம் நிதி – மாநில அரசு ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 26- உயர்கல்விக் கூடங்களில் பயிலும் வசதி குறைந்த
பி40 தரப்பைச் சேர்ந்த 502 இந்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்
வழங்குவதற்காக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் சுமார் 19
லட்சத்து 81 ஆயிரத்து 749 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வரும் ஆகஸ்டு மாதம் வரை கட்டங்
கட்டமாக வழங்கப்படும்.

இதன் முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.கணபதிராவ் தலைமையில் கடந்த சனிக்கிழமை இங்குள்ள மாநில அரசு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 176 மாணவர்கள் 5
லட்சத்து 62 ஆயிரம் வெள்ளியைக் கணபதிராவிடமிருந்து பெற்றுக்
கொண்டனர்.

இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 67 மாணவர்களுக்கு 3
லட்சத்து 13 ஆயிரத்து 474 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை
மேற்கொள்ளும் 109 மாணவர்களுக்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 745
வெள்ளியும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டதாக மக்கள் ஓசை நாளேடு செய்தி
வெளியிட்டுள்ளது.

உயர்கல்வி பெறும் அரசாங்கம் மற்றும் தனியார் உயர்கல்வி
மாணவர்களுக்கான இந்த கல்வி கட்டணம் சம்பந்தப்பட்ட மாணவர்கள்
பயிலும் உயர்கல்விக்கூடங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று
கணபதிராவ் தமதுரையில் குறிப்பிட்டார்.

வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைப்
பெறுவதில் பொருளாதாரச் சிக்கல் ஒருபோதும் காரணமாக இருந்து விடக்
கூடாது என்பதற்காக மாநில அரசு இந்த கல்விக் கட்டண நிதியுதவித்
திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :