SELANGOR

ஷா ஆலமில் ஜூலை தொடங்கி 2 மணி நேரம் கார் நிறுத்துமிட முறை அமல்

ஷா ஆலம், ஜூன் 27- ஷா ஆலம் மாநகர் மன்றம் தனது அதிகார
வரம்பிற்குட்பட்ட பகுதியில் வரும் ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி
இரண்டு மணி நேர வாகன நிறுத்துமிட முறையை அமல் செய்யவுள்ளது.

இந்த இரண்டு மணி நேர கார் நிறுத்துமிட திட்டத்திற்காக மக்கள்
நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் 67 கார் நிறுத்தங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப்
பிரிவு கூறியது.

இந்த இரண்டு மணி நேர கார் நிறுத்துமிடங்களில் உள்ள கோடுகள்
ஆரஞ்சு நிறம் கொண்டவையாக இருக்கும். செக்சன் 9, ஜாலான் தெங்கு
அம்புவான் ஸபேடாவில் ஆறு இடங்களும் செக்சன் 15, ஜாலான்
பஹாட்டில், நான்கு இடங்களும், செக்சன் 25, ஜாலான் செப்பாடுவில் ஆறு
இடங்களும் இந்நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இவை தவிர, செக்சன் 31, ஜாலான் அங்கிரிக் வெனிலா என் பகுதியில் 24
இடங்களும், செக்சன் யு13, ஜாலான் பிரிமா ஆர் பகுதியில் ஏழு
இடங்களும் இந்த இரண்டு மணி நேர கார் நிறுத்தத்திற்கு
ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட அந்த இடங்களில் வாகனங்களை கூடிய பட்சம் இரண்டு
மணி நேரத்திற்கு மட்டுமே நிறுத்த முடியும் என்றும் ஒரு மணி நேரம்
இடைவெளிக்குப் பிறகு அதே இடத்தில் மறுபடியும் வாகனத்தை
நிறுத்தலாம் என்றும் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த கார் நிறுத்துமிடங்களில் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய
வானமோட்டிகளுக்கு அபராதத் தொகையில் கழிவு வழங்கப்படாது.
இத்தகைய குற்றங்களுக்கு குற்றப்பதிவு வெளியிட்டப்பட்ட தேதியின்
அடிப்படையில் 30 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை அபராதம்
விதிக்கப்படும் என மாநகர் மன்றம் விளக்கியது.


Pengarang :