SELANGOR

மலிவு விலையில் பொருள்களை விற்கும் சிறு கடைகளை அனைத்துத் தொகுதிகளிலும் அமைக்க மாநில அரசு திட்டம்

அம்பாங் ஜெயா, ஜூன் 28- மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும்
அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும
சிறு கடைகளை உருவாக்குவது தொடர்பான பரிந்துரையை மாநில அரசு
பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் அக்கடைகளில் கோழி,
இறைச்சி, முட்டை மற்றும் இதர உலர் உணவுப் பொருள்கள்
விற்பனைக்கு வைக்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் மலிவு விலையில் பொருள்களை
விற்பதற்குரிய கடைகளை உருவாக்கும் சாத்தியம் குறித்து என்னிடம்
தெரிவிக்கப்பட்டது. அம்பாங் ஜெயா பகுதியில் இதுபோன்ற கடையை
உருவாக்குவதற்கு நான் விண்ணப்பம் செய்துள்ளேன் என்று அம்பாங்
நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள யுகே பெர்டானாவில் நடைபெற்ற புக்கிட் அந்தாராபங்சா
தொகுதி நிலையிலான மலிவு விற்பனையை பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் சிலாங்கூர் மாநில
விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனை
தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

நம்மிடம் பராமரிப்பு அரசாங்கம் இன்னும் உள்ளது. இந்த மலிவு
விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் 1 கோடியே 20 லட்சம்
வெள்ளி எஞ்சியுள்ளது. ஆகவே, இந்த திட்டத்தைத் தொடர்வதில் எந்த
பிரச்சனையும் இல்லை என்றார் அவர்.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் பெயரில் மாநில அரசினால் நடத்தப்பட்டு
வந்த இந்த மலிவு விற்பனை தற்போது தற்போது வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜூவாலான் ஏசான் ரஹ்மா எனும் பெயரில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.


Pengarang :