NATIONAL

தடுப்புக் காவல் விண்ணப்பம் ரத்து- தெமர்லோ உயர் நீதிமன்ற முடிவுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. மேல் முறையீடு

புத்ராஜெயா, ஜூன் 28- விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிகளை தடுத்து
வைப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (சி.பி.சி.) தாங்கள்
பயன்படுத்துவதற்கு தெமர்லோ உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை
எதிர்த்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செய்துள்ள
முறையீட்டை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் வரும் ஜூலை
20ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

சந்தேகப் பேர்வழிகளை விசாரிப்பதற்கு எம்.ஏ.சி.சி. தனது சொந்தச்
சட்டங்களைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தெமர்லோ உயர் நீதிமன்றத்தின்
நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் அளித்திருந்த தீர்ப்பை
எதிர்த்து எம்.ஏ.சி.சி.

இந்த மேல் முறையீட்டு மனுவைச் செய்துள்ளது. இந்த மேல் முறையீடு தொடர்பான விசாரணை வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதை வழக்கறிஞர் கீதம் ராம் வின்செண்ட் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

ஐயாயிரம் வெள்ளியைச் லஞ்சமாகப் பெற்றதாகச் சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டு தொடர்பில் ஆறு போலீஸ்காரர்களை விசாரணைக்காகத்
தடுத்து வைப்பதற்கு எம்.ஏ.சி.சி. விண்ணப்பித்துள்ளது.

அவர்களில் மூவரை கீதம் ராம் பிரதிநிதிக்கும் வேளையில் இதர மூவர்
சார்பில் ரெவின் குமார் சசிகுமார், லாவண்யா ராஜா, எவ் கா மூன்
ஆகியோர் ஆஜராகின்றனர்.

இந்த மேல் முறையீடு தொடர்பான நிர்வாக வழக்கு மேல் முறையீட்டு
நீதிமன்ற துணை பதிவாளர் முகமது நோர் பிர்டாவுஸ் ரோஸ்லி
முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது இந்த
தேதி நிர்ணயிக்கப்பட்டது.

விசாரணையின் போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக 2009ஆம் ஆண்டு
எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 49வது பிரிவு அந்த ஆணையத்திற்கு பிரத்தியேக
அதிகாரத்தை வழங்கியுள்ளதாகத் தனது வரலாற்றுப் பூர்வத் தீர்ப்பில் நீதித்
துணை ஆணையர் ரோஸ்லான் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :