NATIONAL

அஸ்மின் அலியின் குற்றச்சாட்டு பொய் என்பது புள்ளிவிவரங்கள் வழி நிரூபணம்-  மந்திரி புசார்

கோம்பாக், ஜூன் 28- மாநிலத்தின் கடந்தாண்டு வளர்ச்சி மதிப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு ஆகியவை சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் சிறப்பான வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

மலேசிய புள்ளி விவரத் துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கை மாநிலத்தின் பொருளாதாரம் நலிவடைந்து விட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தகர்த்தெறிந்து விட்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தனது அரசியல் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்ட மாநில பெரிக்கத்தான் தலைவரான டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி மாநில பொருளாதாரம் குறித்து பேசும் போது நேர்மையானவராக நடந்து கொள்ளவில்லை என அவர் சொன்னார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம்  25.5 விழுக்காட்டு பங்களிப்பை வழங்குவதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தரவுகள் காட்டுகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை இதுவே மிக அதிகமான பங்களிப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

மிக சமீபத்தில் அதாவது  கடந்த 2021ஆம் ஆண்டில் நாம் 24.8 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கினோம். அஸ்மின் காலத்தில் 24 விழுக்காட்டைக் கூட எட்டவில்லை என்றார் அவர்.

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கோம்பாக் தொகுதியில் பலியிடும் நிகழ்வுக்காக 115 மாடுகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அஸ்மின், அமிருடின் நிர்வாகத்தைக் காட்டிலும் தமது நிர்வாக காலத்தின் போது மாநிலத்தின் பொருளாதாரம் சிறப்பாக இருந்ததாகக் கூறியிருந்தார்.


Pengarang :