NATIONAL

கெமமான் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

சுக்காய், ஜூலை 3- இங்குள்ள ஆயர் பூத்தே, ஜெராம் மாவாரில் நேற்று
ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உள்பட எட்டு பேரின் விபரங்கள்
அடையாளம் காணப்பட்டன.

கரீம் அப்துல்லா (வயது 39), புத்ரி பல்கிஸ் இஸாத்தி அப்துல் ரஹ்மான்
(வயது 18), புத்ரி அலியா மைசாரா கரீம் (வயது 16), புத்ரி நோர் ஃபாத்தின்
கரீம் (வயது 14), புத்ரி நுரினா நதாஷா கரீம் (வயது 6), புத்ரி அர்யானா
உமைரா கரீம் (வயது 4) ஆகியோரே இச்சம்பவத்தில் காணாமல் போன
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாவர் என்று கெமமான் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹன்யான் ரம்லான் கூறினார்.

இந்த சம்பவத்தில் காணாமல் போன மற்றொருவர் புத்ரி பல்கிஸ்
இஸாத்தியின் வருங்கால கணவரான 24 வயதுடைய முகமது ஃபிக்ரி
சலிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

முன்னதாக அஜிசா எல்யி (வயது 40) மற்றும் அவரின் மகன் முகமது
ஜூல்கர்னாய்ன் ஹைக்கால் கரீம் (வயது 11) ஆகியோரின் உடல்கள்
கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில்
தாங்கள் தகவலைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

குவாந்தான், பெல்டா லெப்பார் ஹிலிரைச் சேர்ந்த இக்குடும்பத்தினர்
அருவியில் குளிப்பதற்காகக் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிளவில்
ஜெராம் வந்தனர் என்று மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

அந்த பகுதியை நன்கு அறிந்த கரீம் அங்கு பொருத்தமற்ற வாகனத்தில்
சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். எனினும், மலையிலிருந்து நீர் திடீரென
பெருக்கெடுத்து வரும் என அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

சம்பவத்தின் போது அப்பகுதியில் 5 முதல் 10 மீட்டர் வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரிய வருகிறது. இதனால் அவர்களால் உடனடியாக உயிர்த்தப்ப இயலாமல் போனது என்றார் அவர்.


Pengarang :