SELANGOR

பொதுமக்களின் பாதுகாப்புக்காகப் பத்தாங் காலி தொகுதியில் 10 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 3- பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு
பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய 10 சோலார் எல்.இ.டி.
விளக்குக்குகள் கடந்த ஜூலை 1ஆம் தேதி பொருத்தப்பட்டன.

இந்த விளக்குகள் கம்போங் சுங்கை மாசின், கம்போங் கெந்திங் மாலிக்,
கம்போங் பாடாங், தாமான் ஸ்ரீ லியாம் மற்றும் தாமான் புக்கிட் தெராத்தாய்
ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டதாகத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

கிராம சமூக நிர்வாக மன்றம் (எம்.பி.கே.கே.) ஊராட்சி மன்ற
உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் வழங்கிய பரிந்துரையின் பேரில்
இந்த விளக்குகளைப் பொருத்துவதற்கான இடங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த
விளக்குகளைப் பொருத்தும் பணியின் போது வட்டாரத் தலைவர்களுடன்
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வருகை மேற்கொண்டு விளக்குகள்
பொருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தேன்
என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளுக்கும் இத்தகைய எல்.இ.டி.
விளக்குகளைப் பொருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த மாநில அரசுக்கு
தாம் நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
முக்கிய இடங்களில் எல்.இ.டி. சாலை விளக்குகளைப் பொருத்துவதற்கு
மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம்
ஹஷிம் கடந்த பிப்வரி மாதம் 11ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :