SELANGOR

செலவினத்தைக் குறைக்க உதவும் மலிவு விற்பனை- பள்ளி சிற்றுண்டிச்சாலை நடத்துநர் மகிழ்ச்சி

அம்பாங், ஜூலை 3- மாநில அரசின் ரஹ்மா மலிவு விற்பனையின்
வாயிலாகப் பள்ளி சிற்றுண்டிச்சாலை நடத்துநர் குறைந்த விலையில்
அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினைப்
பெற்றுள்ளார்.

இந்த திட்டத்தில் கலந்து பொருள்களை வாங்குவதன் மூலம்
மாணவர்களுக்காக அதிக எண்ணிக்கையில் உணவுத் தயாரிப்பதில்
ஏற்படும் கூடுதல் செலவு குறித்து தாம் கவலைப்படத் தேவையில்லை
என்று முகமது ஹபிஸ் அப்துல் ரஹ்மான் (வயது 33) கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் பொருள்களை மிகவும் நியாயமான
விலையில் வாங்க முடிகிறது. நேரப் பற்றாக்குறை காரணமாக இந்த
மலிவு விற்பனையில் அடிக்கடி பொருள்களை வாங்க இயலாத நிலை
ஏற்பட்டுள்ளது. ஆயினும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இத்தகைய
மலிவு விற்பனைகளில் பொருள்களை வாங்க நான் தவறுவதில்லை
என்றார் அவர்.

இங்குள்ள நுருஸாஹடா பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற தெராத்தாய்
தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ரஹ்மா மலிவு விற்பனையில் பொருள்களை தங்கு தடையின்றி
வாங்குவதற்கு ஏதுவாக சிறப்பான முறையில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது குறித்து ஓங் மேய் லீ (வயது 62) பாராட்டுத்
தெரிவித்தார்.

இங்கு அமல்படுத்தப்படும் விற்பனை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
காரணம் முண்டியடித்துக் கொள்ளாமல் மிகவும் சீரான முறையில்
பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது என்றார் அவர்.

இதனிடையே, ஐம்பது வெள்ளியில் அதிகமான பொருள்களை
வாங்குவதற்குரிய வாய்ப்பினை இந்த ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டம்
வழங்குவதாக நேர்ஹயாத்தி முகமது நோர் (வயது 67) கூறினார்.

இங்கு பொருள்களை வாங்குவதால் எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை.
நான் வெறும் 50 வெள்ளி மட்டும்தான் கொண்டு வந்தேன். இரண்டு
கோழிகள், இரண்டு தட்டு முட்டை மற்றும் ஒரு பாக்கெட் அரிசியை
இத்தொகையைக் கொண்டு வாங்கி விட்டேன் என அவர் சொன்னார்.


Pengarang :