ANTARABANGSA

கம்போங் கெர்டாஸ் மக்களின் பொருளாதார உயர்வுக்கு உதவும் உரப்பாசன மிளகாய் சாகுபடித் திட்டம்

கோம்பாக், ஜூலை 4- இங்குள்ள கம்போங் கெர்டாஸ் மக்கள்                               தொடக்கியுள்ள உரப்பாசன முறையிலான மிளகாய் சாகுபடித்                                            திட்டம் இருமாதங்களில் 14,000 வெள்ளி மதிப்புள்ள 700 கிலோ மிளகாய்           உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.

இந்த கெர்டாஸ் சமூக வேளாண் திட்டம் இளைஞர்கள், தனித்து வாழும்
தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வேலை வாய்ப்பினை
வழங்கியுள்ளதாக கிராமத் தலைவர் நசாருடின் முகமது டார்விஸ்
கூறினார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இந்த திட்டத்தை நாங்கள்
தொடக்கினோம். வட்டார மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது
மற்றும் தரிசாக உள்ள நிலங்களை முறையாகப் பயன்படுத்துவது ஆகிய
நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று
அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் 1,200 பைகளில் மிளகாய்ச் செடிகளை நடவு செய்தோம்.
அந்த செடிகள் இப்போது பலன் தரத் தொடங்கி விட்டன என்று சிலாங்கூர்
கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த மிளகாய் சாகுடிபடித் திட்டத்தை
மேற்கொள்வதற்கு மாநில விவசாய இலாகா வழிகாட்டியதோடு கோம்பாக்
நாடாளுமன்றத் தொகுதி சேவை மையமும் வேண்டிய உதவிகளை
வழங்கின என்றார் அவர்.

இங்கு விளையும் மிளகாய் அருகிலுள்ள மொத்த விற்பனை சந்தைகளில்
விற்கப்படுவதோடு மூவார் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து ஆர்டர்கள்
வந்துள்ளன என அவர் மேலும் சொன்னார்.

இந்த மிளகாய் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையில் பத்து
விழுக்காடு கிராம மேம்பாட்டு நிதியில் சேர்க்கப்படும் வேளையில்                                எஞ்சியத் தொகையை இத்தோட்டத்தில் வேலை செய்வோர் பகிர்ந்து
கொள்வர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :