NATIONAL

பக்கத்தான்-பாரிசான் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது- இரு பி.என். மாநிலங்களை வெற்றி கொள்ள அன்வார் நம்பிக்கை

புத்ராஜெயா, ஜூலை 4- ஆறு மாநிலங்களில் விரைவில்
நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கிடையே நடைபெற்ற தொகுதி
பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

அவ்விரு கூட்டணிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ
டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடியை தாம் அண்மையில் சந்தித்ததாக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தொகுதி கோரல் தொடர்பான விவகாரம் இதுவரை எழவில்லை. இது
குறித்து பாரிசான் தலைவருடன் நான் பேசியுள்ளேன். பக்கத்தான் அல்லது
பாரிசான் மாநிலத் தலைவர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பதற்கு சிறிது
அவகாசம் வழங்கியுள்ளோம் என்று இங்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு
விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
சொன்னார்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரங்கானு
ஆகிய ஆறு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்
நடைபெறவுள்ளது.

இந்த மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்கு என்ன என
வினவப்பட்ட போது, தற்போதுள்ள மூன்று மாநிலங்களைத் தக்க வைத்துக்
கொள்ளும் அதேவேளையில் மேலும் இரு மாநிலங்களைக் கைப்பற்ற
முடியும் எனத் தாங்கள் நம்புவதாக அன்வார் பதிலளித்தார்.

மூன்று மாநிலங்களை உறுதியாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என
நான் நம்புகிறேன். இதர இரு மாநிலங்கள் மீது நாம் கவனம்
செலுத்துகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களை
பக்கத்தான் கூட்டணி ஆட்சி புரியும் வேளையில் கெடா,
கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்கள் பெரிக்கத்தான்
நேஷனல் வசம் உள்ளன.


Pengarang :