NATIONAL

சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் மூலம் ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெறும்- துணையமைச்சர் நம்பிக்கை

போர்ட்டிக்சன், ஜூலை 5- நாட்டிற்கு வரும் அந்நியச் சுற்றுப்பயணிகளின்
எண்ணிக்கை அதிகரிப்பு தற்போது குறைவாக இருக்கும் ரிங்கிட்டின் மதிப்பு
உயர்வு காண உதவும் என்று துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது
மஸ்லான் கூறினார்.

தற்போது சுமார் 20 கோடி சீன நாட்டு சுற்றுப்பயணிகள் வெளிநாடுகளுக்குச்
சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் மலேசியாவை
தங்களின் தேர்வுக்குரிய சுற்றுலா மையமாகத் தேர்ந்தெடுப்பர் எனத்
தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.

அந்நிய சுற்றுப்பயணிகள் மூலம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும்
என்பதால் அதிகமான சுற்றுப்பயணிகளை நாம் எதிர்பார்க்கிறோம். இதன்
மூலம் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டவர்கள், ஹோட்டல் நடத்துநர்கள்,
உணவகத் துறையினரும் பயன் பெற முடியும் என்றார் அவர்.

அதோடு மட்டுமல்லாது அந்நிய சுற்றுப்பயணிகள் மத்தியில் ஏற்படும்
ரிங்கிட்டின் தேவை அந்த உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு உயர்வதற்குரிய
வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள போர்ட்டிக்சன் பயணிகள் படகுத் துறைக்கு வருகை
மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உதவுவதில் அரச மலேசிய
சுங்கத் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் சிறப்பாக பங்காற்ற முடியும்
என்றும் அகமது மஸ்லான் சொன்னார்.

விமான நிலையங்கள் மற்றும் படகுத் துறைகளில் தாமதம் ஏற்படுவது
அடிக்கடி நிகழும் நிகழ்வாக உள்ளது. நமது நாட்டிற்கு அதிகமான
சுற்றுப்பயணிகள் வர வேண்டும் என விரும்புகிறோம். இவ்விவகாரத்தில்
முக்கியப் பங்கினை ஆற்றும் நிறுவனங்களில் ஒன்று சுங்கத் துறையாகும்.

சுற்றுப்பயணிகள் வருகையை அது சிறப்பான முறையில் நிர்வகிக்க
வேண்டும் என்றார் அவர்.


Pengarang :