SELANGOR

நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணி இம்மாத இறுதியில் முற்றுப்பெறும்

ஷா ஆலம், ஜூலை 6- மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட
சாலைகளைச் சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு
வரும் வேளையில் இம்மாத இறுதிக்குள் அப்பணிகள் முற்றுப்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட
மாபெரும் சாலை சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த
பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷம் கூறினார்.

ஊராட்சி மன்றங்கள், பொதுப்பணித்துறை, வடிகால் மற்றும் நீர்பாசனத்
துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளில்
இந்த சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த சாலை சீரமைப்புத் திட்டத்தின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப்
பணிகள் முற்றுப்பெற்று விட்டன. இரண்டாம் கட்டம் தொடங்கி ஐந்தாம்
கட்டம் வரையிலான புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. சிறப்புக் குழு பரிந்துரைத்த சாலைகளில் இந்த பழுதுபார்ப்பு
பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சாலைகளில் உள்ள குழிகளை மூடும்
பணியும் அதனைத் தொடர்ந்து சாலையை புதிதாக அமைக்கும் பணியும்
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட சாலைகளில் பராமரிப்பு பணிகளை கண்காணிக்கும்
பொறுப்பும் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களிடமே ஒப்படைக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகளின் நிலை தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் புதிய
தடங்களுக்கான பதிவை மேற்கொள்வதற்கும் மாநில அரசு கூடுதலாக
ஒன்றரை லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளத் தகவலையும்
இஷாம் வெளியிட்டார்.


Pengarang :