SELANGOR

எஸ்.பி.ஆர். அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தயாராகின்றனர்

கோல சிலாங்கூர், ஜூலை 7- தேர்தல் அதிகாரிகளாக தேர்தல்
ஆணையத்தால் (எஸ்.பி.ஆர்.) நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விரைவில்
நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி
வருகின்றனர்.

இதன் அமலாக்கம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் குறிப்பாக
பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் பயன்படுத்தபடவுள்ள
பள்ளிகள் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக கல்வியமைச்சர்
ஃபாட்லினா சீடேக் கூறினார்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது கடைபிடிக்கப்படும்
வழக்கமான நடைமுறை இதுவாகும். இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள்
அனைத்து முன்னேற்பாடுகளையும் முடித்து விட்டோம். இதன் தொடர்பான
அறிவிப்புகள் கட்டங் கட்டமாக வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

இங்கு பெஸ்தாரி ஜெயாவில் உள்ள சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில்
(யுனிசெல்) சித்திக் பாட்ஸில் நினைவு நூலகத்தை திறந்து வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யு.பி.எஸ்.ஆர். தேர்வு
மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பிடி3 தேர்வை மீண்டும்
அமல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு
வருவதாகவும் ஃபாட்லினா கூறினார்.

நாட்டின் எதிர்கால கல்வி இலக்கை தீர்மானிப்பதற்கு ஏதுவாக அந்த
தேர்வுகளை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தெளிவான
முடிவை எடுப்பதற்காக இந்த சந்திப்புகள் நடத்தப்படுகின்றன என்றார்
அவர்.


Pengarang :