NATIONAL

பள்ளியில் பகடிவதை நடந்துள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணை – கல்வி அமைச்சகம்

புத்ராஜெயா, ஜூலை 7 – மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் பகடிவதை நடந்துள்ளதா இல்லையா என்பதை அறிய கல்வி அமைச்சகம் (MOE) விசாரணை நடத்தி வருகிறது என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

பள்ளியில் பகடிவதையை அனுபவித்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட மாணவன் தனது ஒன்பது வயது சகோதரனின் கழுத்தை நெரித்ததன் விளைவாக அச்சிறுவன் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்வி அமைச்சு மேற்கண்ட விசாரனையை நடத்தி வருகிறது.

“14 வயதுடைய அம்மாணவன் பள்ளியில் பகடிவதையை எதிர்நோக்கி உள்ளாரா என்பதைக் கண்டறிய கல்வி அமைச்சகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

“அப்படி நடந்து இருந்தால், அது பகடிவதை புகார் போர்டல் மூலம் கல்வி அமைச்சின் புகார் செயல்முறைக்குச் செல்ல வேண்டும். பின் அதற்கான விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

படிவம் ஒன்றிலிருந்து மூத்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது மகனின் அணுகுமுறை மாறத் தொடங்கியதாக அம்மாணவனின் தந்தை கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அம்மாணவன் ஜூலை 12 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :