NATIONAL

போதைப்பொருள் தொடர்பாக இரண்டு சகோதரர்கள் உட்பட 6 பேர் கைது

ஈப்போ, ஜூலை 7: ஜெலா பாங்கில் உள்ள ஒரு கடையைப் போதைப்பொருள்
பதப்படுத்தும் ஆய்வகமாக மாற்றியதாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்கள்
உட்பட 6 பேர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

32 முதல் 57 வயதுக்குட்பட்ட அந்த ஆறு ஆண்கள் பேராக் காவல் படைத்
தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த
குழுவினரால் அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப் பட்டனர் என பேராக்
காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

குறிப்பிட்ட வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், 155 கிராம் எடையுள்ள
மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள், 52.3 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும்
47.5 லிட்டர் மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் திரவம்
கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு RM672,649 ஆகும்,” என்று அவர் இன்று
செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். .

RM76,000 மதிப்புள்ள போதைப்பொருள் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள், ஒரு லாரி மற்றும் நான்கு
மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

அந்த ஆறு பேர் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்தகால
குற்றப்பதிவைக் கொண்டிருப்பதோடு அவர்களின் சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள்
மெத்தம்பேட்டமைன் மற்றும் மோர்பின் ஆகியவற்றிற்குச் சாதகமாக இருப்பதைக்
கண்டறிந்ததாக அவர் கூறினார்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன்
பிரிவு 39B இன் கீழ் மேல் விசாரணைக்காக அவர்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :