NATIONAL

சிலாங்கூர்  உள்நாட்டு உற்பத்தி -வருவாய் விகிதம் தொடர்ந்து உயர்வு – மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜூலை.7- மாநிலம்  கடந்த சில  ஆண்டுகளாக பலதரப்பட்ட சவால்களை சந்தித்த போதிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் சிலாங்கூரின் உள்நாட்டு உற்பத்தி -வருவாய் விகிதம் உயர்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி திட்டவட்டமாக கூறினார்.
இன்று  காலை ஷா ஆலமில் உள்ள எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் மாநில பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனதுரையில் இத்தகவலை தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் – வருமானம் குறித்து பலர் பலவிதமாக கூறலாம். ஆனால் உண்மை தரவு என்பது வேறு. முன்னதாக வெள்ளம், கோவிட்-19 தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர் கொண்ட போதிலும் இம்மாநில  உள்நாட்டு உற்பத்தி – வருமான விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
 2019ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில உள்நாட்டு உற்பத்தி – வருமான விகிதம் 23.7 விழுக்காடாக இருந்தது. பின் 2020 ஆண்டில் கோவிட்-19 தொற்று பரவல் ஏற்பட்ட போதிலும் உற்பத்தி – வருவாய் விகிதம் 24.3 விழுக்காடாக உயர்ந்திருந்தது.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 24.8 விழுக்காடாகப் பதிவான வேளையில் கடந்த ஆண்டு 25.5 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக அண்மைய தரவுகள்  காட்டுகின்றன. அதிலும்  நாட்டின் வருமானத்திற்குப் பங்களிப்பை வழங்கும் முதன்மை மாநிலம் சிலாங்கூர்தான் என்பதயும் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி சுட்டிக் காட்டினார்.
நடைபெற்ற இந்த பள்ளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாடு- மக்கள் நலன் துறைகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. கணபதி ராவ், மாநில அரசாங்க துணைச் செயலாளர், பள்ளி பிரதிநிதிகள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Pengarang :