NATIONAL

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்  விடுதி  செயல்பாடு திட்டத்திற்கு  3 லட்சம் ரிங்கிட் கூடுதல் நிதி

ஷா ஆலம், ஜூலை.7- மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி (அஸ்ராமா)   திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் கூடுதல் நிதியாக 300,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
 இன்று  காலை  ஷா ஆலமில் உள்ள எம் பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் மாநில பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மந்திரி புசார் கலந்து கொண்டு பள்ளிகளுக்கான உதவிகளை வழங்கினார்.
 அவர் பேசுகையில் சிலாங்கூர் அரசாங்கம் மாநில பொருளாதார வளர்ச்சியில் மட்டும் அல்லாது கல்வி ரீதியான வளர்ச்சியிலும் என்றும் அக்கறை கொள்கிறது.  பள்ளி கட்டுமான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர்கள்-மாணவர்களுக்கு வசதியான கற்றல்- கற்பித்தல் சூழலை உருவாக்கி தரவும் சிலாங்கூர் மாநில பள்ளிகளுக்கான  உதவி திட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு கூட இந்த பள்ளி உதவித் திட்ட முன்னெடுப்பின் வாயிலாக 988 பள்ளிகளுக்கு மொத்தமாக 26.5 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
அது மட்டுமல்லாது, மிட்லண்ட்ஸ் தோட்ட தமிழ் பள்ளியில் மாணவர் தங்கும் விடுதி திட்டத்தில்  மாணவர்கள், இவ்வாண்டே  சேர்ந்து பயனடையும் வண்ணம்  அவர்களின்  உணவு போன்ற  செலவுகளுக்கு  உதவும்  வண்ணம்   சிலாங்கூர் அரசாங்கம் இத் திட்டத்திற்கு கூடுதல் நிதியாக 300,000 ரிங்கிட் வழங்குவதாகவும் மந்திரி புசார் அறிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மொத்தமாக 5 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

Pengarang :