NATIONAL

இனவாதக் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் ஹாடி அவாங் மீது போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜூலை 10- அண்மையில் 3ஆர் (ஆட்சியாளர்கள், சமயம் மற்றும் இனம்) விவகாரங்களை தொட்டுப் பேசியதாக கூறப்படுவது தொடர்பில் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் பொதுவுடைமை மற்றும் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட காலனித்துவ வாதிகள் விளக்கத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இஸ்லாத்தின் பொருளை நிலை நிறுத்த ஜசெக முயல்வதாக ஹாடி அவாங் கூறியிருந்தது தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்படுவதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (தடயவியல் மற்றும் வியூக திட்டமிடல் பிரிவு) துணை இயக்குநர் டத்தோ எஸ். சுரேஷ் குமார் கூறினார்.

இதன் தொடர்பில் டி 5 என வகைப்படுத்தப்பட்ட குற்றப் பிரிவின் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவு 1988ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆம் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஹாடி அவாங் இந்த கருத்தைக் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வேளையில் உள்நாட்டு இணைய சஞ்சிகை ஒன்று அச்செய்தியை அதே தினத்தில் பதிவேற்றியதாக அவர் சொன்னார்.

இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையிலான கருத்துகளை வெளியிட வேண்டாம் என சுரேஷ் குமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :