NATIONAL

ஐந்து குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் மூன்று பள்ளி ஊழியர்கள் கைது

ஈப்போ, ஜூலை 11: தாமான் மேரு பெர்டானா 2ல் உள்ள மழலையர் பள்ளியில், ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள ஐந்து குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் மூன்று ஊழியர்களைக் காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.

அக்குழந்தைகளின் தந்தை ஒருவரிடமிருந்து (31) புகாரைப் பெற்ற பின்னர், 26 முதல் 51 வயதுடைய மேலாளர்கள் மற்றும் பெண் ஆசிரியர் என மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

“குறிப்பிட்ட தந்தை தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்ற பிறகு இடது கையில் காயத்தைக் கண்டார். அதனால், தனது மகள் பள்ளியில் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டதாகச் சந்தேகிக்கிறார்” என்று யஹாயா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அம்மழலையர் பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான ஐந்து குழந்தைகளின் குடும்பங்களிலிருந்து இதுவரை ஐந்து புகார் அறிக்கைகள் காவல் துறைக்குக் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக ஜூலை 14 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் காவல்துறையினர் வழக்கு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்றும் யஹாயா கூறினார்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM50,000க்கு மிகாமல் அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :