NATIONAL

RM28 மில்லியனுக்கும் அதிகமான பணப்பரிமாற்றத்தை காவல்துறை வெற்றிகரமாகத் தடுத்தது

கோலாலம்பூர், ஜூலை 11 – வணிக மின்னஞ்சல் (BEC) மோசடிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு RM28 மில்லியனுக்கும் அதிகமான பணப் பரிமாற்றத்தை காவல்துறை வெற்றிகரமாக நிறுத்தியது.

“BEC“ என்பது நிறுவனங்களை இலக்காகக் கொண்ட செயல்படும் ஒரு வகையான மோசடி ஆகும்.  இதில் நிறுவனங்களின் மின்னஞ்சலை ஹேக் செய்வதன் மூலம் அவர்களின் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன.

பேங்க் நெகாரா மலேசியா, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நிறுவனம் ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பு நடவடிக்கை சாத்தியமானது என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

“ஜூன் 22 அன்று, பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்குச் சப்ளையர் நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது, அதாவது ஒரு புதிய வங்கி கணக்கிற்குப் பணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்நிறுவனம் அதன்பின் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தியது. ஆனால் சப்ளையர் நிறுவனம் இன்னும் பணம் பெறவில்லை என்று தெரிவித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை அந்நிறுவனம் உணர்ந்தது.

காவல்துறையினர், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வங்கிப் பரிமாற்றங்களைக் கண்டறிந்து, RM28,361,636.68 வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவதைத் தடுக்க முடிந்தது.

மேலும், குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக ரம்லி கூறினார்.

பொதுமக்கள், குறிப்பாக தங்கள் அன்றாட விவகாரங்களில் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் வணிகங்கள், எப்போதும் கவனமாக இருக்கவும், அவர்கள் பெறும் மின்னஞ்சல் உண்மையான வாங்குபவர் அல்லது விற்பவரிடமிருந்து வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் நினைவூட்டப்படுவதாக அவர் கூறினார்.


“பணம் செலுத்தும் நோக்கங்களுக்காக வங்கிக் கணக்கில் மாற்றம் இருந்தால் ஜாக்கிரதை. மேலும், அதனை உறுதி செய்ய, விற்பனையாளர் அல்லது சப்ளையர் நிறுவனத்தைத் தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்ளவும்,”  அவர் ஆலோசனைக் கூறினார்.


Pengarang :