SELANGOR

உதவிகளை வழங்குவதில் நடுநிலைப் போக்கு- எதிர்க்கட்சித் தொகுதிகளைப் புறக்கணிக்காத மாநில அரசுக்குப் பாராட்டு

ஷா ஆலம், ஜூலை 12- மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர்
பென்யாயாங் சமூக நலத்திட்டத்தின் வழி (ஐ.எஸ்.பி.) கிராமங்கள் மற்றும்
எதிர்க்கட்சிகள் வசமுள்ள தொகுதிகள் உள்பட மாநிலத்தின் அனைத்து
மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.

மாநிலத்தின் திட்டங்கள் வாயிலாக அரசியல் வேறுபாடின்றி அனைத்து
மக்களும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்
அனைத்து வளங்களும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதாகச்
சுங்கை ஆயர் தாவார் தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் டத்தோ ரிஸாம்
இஸ்மாயில் கூறினார்.

எனது தொகுதியைச் சேர்ந்த மக்கள் மாநில அரசின் உதவித்
திட்டங்களைப் பெறுவதிலிருந்து விடுப்படவில்லை. குறிப்பாக ஐ.எஸ்.பி.
திட்டம் மாநில மக்களுக்கு உண்மையில் நல்ல பலனைத் தருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

“புசாட் ஸ்மார்ட் டேசா“ எனப்படும் விவேக கிராம மைய முன்னோடித்
திட்டத்திற்கான இடங்களில் ஒன்றாகச் சுங்கை ஆயர் தாவார் தொகுதியைத்
தேர்ந்தெடுத்த மாநில அரசு நிர்வாகத்திற்குத் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாகவும் அவர் சொன்னார்.

இந்த திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய வசதியுடன் கூடிய இந்த மையம் புறநகர் மக்களுக்காக
அனைத்து கல்வி வசதிகளையும் கொண்டுள்ளது.


Pengarang :