NATIONAL

உறைவிடப் பள்ளித் திட்டத்தின் வழி ஏழை மாணவர்கள் கல்வியைக் பாதியில் கைவிடுவதைத் தடுக்க முடியும்- குணராஜ்

ஷா ஆலம், ஜூலை 12- இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளித் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் பிரச்சனையை தடுக்க முடியும் என்று செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

அதிகமான இந்திய மாணவர்கள் கல்வியை தொடராமல் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் மேற்கொண்ட சிறந்த திட்டமாக இந்த மாணவர் தங்கும் விடுதி விளங்குகிறது என்றும் அவர் சொன்னார்.

மொத்தம் 200 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த விடுதி சிலாங்கூர் அரசின் 40 லட்சம் வெள்ளி மானியத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போதிலும், கோவிட்-19 பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அது இதுநாள் வரை  செயல்படாமல் இருந்து வந்ததாக இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் தெரிவித்தார்.

இந்த விடுதி நடத்துவதற்கு தேவையான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுவதற்காக எஸ்.ஐ.சி.சி. எனப்படும் சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய தரப்பினர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் பலனாக முதல் கட்டமாக 300,000 வெள்ளியை மாநில அரசு வழங்கியுள்ளது என அவர் சொன்னார்.

இந்த நிதியைக் கொண்டு தொடக்க கட்டமாக 25 மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் மானியம் ஒதுக்கப் பட்டவுடன் இங்கு தங்கிப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கட்டங் கட்டமாக உயர்த்தப்படும் என்று இன்று இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாணவர் தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை அடையாளம் காண்பதில் பள்ளி மேலாளர் வாரியம் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்துடன் ஒத்துழைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தங்கும் விடுதியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இடமளிப்பதன் மூலம் அவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதை தடுக்க முடியும் என்பதோடு விளையாட்டு உள்ளிட்ட புறப்பாடு நடவடிக்கைகளிலும் அம்மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

இந்த தங்கும் விடுதி திட்டத்தை மாநிலத்திலுள்ள இதரத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் குறித்த வினவப்பட்ட போது, இந்த விடுதியின் வெற்றியைப் பொறுத்து இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று குணராஜ் பதிலளித்தார்.

இது போன்ற தங்கும் விடுதிகளை நடத்துவதில் எத்தகைய சவால்கள் ஏற்படும் என்பதை தொடக்கக் கட்டமாக சேர்க்கப்படும் 25 மாணவர்களைக் கொண்டு தான் தீர்மானிக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.


Pengarang :