NATIONAL

மலிவு விற்பனைக்கு மானியம் வழங்க மாநில அரசு வெ.2.3 கோடி செலவிட்டது

ஷா ஆலம், ஜூலை 13- மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப்  பொருள்களை வாங்கும் மக்களின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் அரசாங்கம் 
இதுவரை கிட்டத்தட்ட 2 கோடியே 30 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

கோழி, மீன், காய்கறிகள் மற்றும் பிற சமையல் பொருட்களை குறைந்த விலையில் வாங்க உதவும்  ஏசான் விற்பனைத் திட்டத்திற்கு  உதவுவதற்காக மானிய வடிவில் அந்த தொகை வழங்கப்பட்டது என்று  மந்திரி புசார் கூறினார் .

பெருநாள் கால ஜூவாலான் மெகா எனப்படும் மாபெரும் விற்பனைத் திட்டம் மூலம் சிலாங்கூர் முழுவதும் விற்பனை நடைபெறும் இடங்கள் அதிகரிக்கப்பட்டதோடு 
அடிக்கடியும் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு மாநில அரசு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சுடன் ஒத்துழைக்கிறது. கூட்டாக நடத்தப்படும் ஏசான் ரஹ்மா திட்டம் மூலம் சிலாங்கூர் முழுவதிலும் அதிக இடங்களில் நடைபெறும் நிகழ்வாக இந்த மலிவு விற்பனை 
மாற்றப்பட்டது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சந்தையில் மிதமிஞ்சிய காய்கறிகளை விற்பனை செய்வதில் உதவுவதற்காக சிலாங்கூர் ஆக்ரோ மார்க்கெட் (எஸ் ஏ.எம்.) எனும் பெயரில் இத்திட்டம் கடந்த  2018 ஆரம்பிக்கப்பட்டது என அவர் விளக்கினார் .

இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் சமையல் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியது . மக்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட அரசு என்பதற்கு இதுவே சான்று.

இந்த நிர்வாகம் எப்போதும் சிலாங்கூர் மக்களின்  நலன் மற்றும் நல்வாழ்வுக்கு 
முன்னுரிமை அளிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாயப் பொருள் 
சந்தை வாரியத்தின் ஒத்துழைப்புடன் மாநிலத்தின்  ஒன்பது மாவட்டங்களை 
உள்ளடக்கிய 87 இடங்களில் இந்த விற்பனை நடத்தப்பட்டது.

அதே ஆண்டு அக்டோபர் வரை, இத்திட்டம் மூலம்  35  லட்சம் வெள்ளி மதிப்புள்ள  விற்பனை  பதிவு செய்யப்பட்டது.

Pengarang :