NATIONAL

3ஆர் விவகாரம்- கெடா மந்திரி புசாருக்கு எதிராக விசாரணை- ஐ.ஜி.பி. தகவல்

கோலாலம்பூர், ஜூலை 14- அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்
கூட்டம் ஒன்றில் 3ஆர் விவகாரங்களை (சமயம், இனம் மற்றும்
ஆட்சியாளர்கள்) எழுப்பியது தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ
முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக அரச மலேசியப் போலீஸ் படை
விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நேற்று தொங்கிய வேளையில்
அது முற்றுப் பெற ஏழு நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன்
கூறினார்.

உண்மையில், இச்சம்பவம் தொடர்பில் நாம் விசாரணையை
விரைவுபடுத்த முடியாது. இருந்தாலும் 3ஆர் தொடர்பான புகார்களை
விசாரிப்பதற்காக நம்மிடம் 21 அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு உள்ளது
என்று அவர் சொன்னார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 3ஆர் தொடர்பில் 61 விசாரணை
அறிக்கைகளை திறந்துள்ளோம். மிக அண்மையில் புகார் செய்யப்பட்ட
கெடா மந்திரி புசார் தொடர்புடைய விவகாரமும் இதில் அடங்கும் என்று
அவர் கூறினார்.

இந்த 3ஆர் புகார்கள் தொடர்பில் தண்டனைச் சட்டம், நிபந்தனைச் சட்டம்
மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டம்
ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என புக்கிட்
அமானில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.

அரசியல்வாதிகள், முன்னாள் அரசியல்வாதிகள், அரசு சாரா அமைப்புகளின்
பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை
அறிக்கைகள் முழுமை பெற்றப் பின்னர் மேல் நடவடிக்கைக்காக அது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர்
குறிப்பிட்டார்.

முகமது சனுசி தவிர்த்து பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி
அவாங், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், முன்னாள்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோருக்கு எதிராகவும்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :