NATIONAL

தேசிய மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து சம்மன்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடி

ஈப்போ, ஜூலை 14 – அரச மலேசியக் காவல்துறை (PDRM), 2023 ஆண்டிற்கான தேசிய மாதம் மற்றும் “ஃப்ளை தி ஜாலூர் ஜெமிலாங்“ பிரச்சாரத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து சம்மன்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியை வழங்குகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை புலாத்தான் சுல்தான் அஸ்லான் ஷா, மேரு ராயாவில் உள்ள பூத் எண் 8 இல் அபராதத் தொகையைச் செலுத்தலாம். மேலும், அபராதத் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த முடியும்.

விபத்துக்கள், ஒப் செலாமட்டின் போது வழங்கப் பட்டவை, நீதிமன்ற விசாரணைகள் அல்லது கனரக வாகனங்கள் தொடர்பானவை, சாலையின் இரட்டை கோடு விதியை மீறுதல் மற்றும் அவசரகாலப் பாதையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை தவிர பிற அபராதங்கள் அனைத்தும் தள்ளுபடிக்குத் தகுதியானவை.

மேலும், போக்குவரத்து விளக்கைப் பின்பற்ற தவறியதற்காகவும் வாகன வெளிப்புறத்தை மாற்றியதற்காகவும் வழக்கப்பட்ட அபராதங்கள் தள்ளுபடிக்குத் தகுதியற்றவை ஆகும்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினக் கொண்டாட்டம் டதாரான் புத்ராஜெயாவில் நடைபெறும். மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியத் தின கொண்டாட்டம் கூச்சிங் சரவாக்கில் நடைபெறும்.

– பெர்னாமா


Pengarang :