NATIONAL

மேல் முறையீடு ஏற்பு- ஆசியப் போட்டியில் 301 விளையாட்டாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

கோலாலம்பூர், ஜூலை 14- சீனாவின் ஹங்ஸோவில் நடைபெறும் ஆசியப்
போட்டியில் பி2 பிரிவினர் பங்கேற்பதற்கு ஏதுவாக தேர்வு நிபந்தனைகளை
மலேசிய ஒலிம்பிக் மன்ற தேர்வுக்குழு (ஒ.சி.எம்.) தளர்த்தியத்தை
தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் அப்போட்டியில்
பங்கேற்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஓ.சி.எம். விதித்த கடுமையான விதிமுறைகள் காரணமாக எதிர்வரும்
செப்டம்பர் 23 முதல் ஆக்டோபர் 8 வரை நடைபெறவிருக்கும் ஆசியப்
போட்டியில் பங்கேற்பதற்கான நிபந்தனைகளை 222 விளையாட்டாளர்கள்
மட்டுமே தொடக்கத்தில் பூர்த்தி செய்ததாகத் தேர்வுக் குழுவின் தலைவர்
டான்ஸ்ரீ முகமது நோர்ஸா ஜக்காரியா கூறினார்.

எனினும், 83 விளையாட்டாளர்களை உட்படுத்திய பல்வேறு விளையாட்டுத்
துறைகளிடமிருந்து மேல் முறையீடு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பி2
பிரிவைச் சேர்ந்த 79 விளையாட்டாளர்கள் இப்போட்டியில் பங்கேற்பதற்கு
ஓ.சி.எம். அனுமதியளித்தது என்று அவர் சொன்னார்.

இந்த நிபந்தனை தளர்வின் காரணமாக இம்முறை ஹாங்ஸோ ஆசியப்
போட்டியில் பங்கேற்கும் மலேசிய விளையாட்டாளர்களின் எண்ணிக்கை
301ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

எனினும், பேங்காக் ஆசிய வெற்றியாளர் போட்டி, ஃபுக்குகா அனைத்துலக
அக்குவாதிக்ஸ் போட்டி, சுபாங், சியா வோ குறி சுடும் போட்டி
ஆகியவற்றின் முடிவுகள் கருத்தில் கொள்ளப்பட்டப் பின்னர் அந்த
போட்டியில் பங்கேற்கவிருக்கும் மலேசிய விளையாட்டாளர்களின்
உண்மையான எண்ணிக்கை நாளை தெரிய வரும் என்றும் அவர்
தெரிவித்தார்.

ஆசிய போட்டியில் பங்கேற்கும் பி2 விளையாட்டாளர்களுக்கு ஏற்பாட்டு
ஆதரவு வழங்கப்படாது என்பதோடு அவர்கள் பதக்கம் வெல்வதற்கு
இலக்கு நிர்ணயிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இடம் பெற மாட்டார்கள்.


Pengarang :