NATIONAL

போலீசாரின் அதிரடிச் சோதனையில் மூவர் கைது- வெ.1.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜூலை 17- புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற
புலனாய்வுத் துறை செராஸ், கோலாலம்பூர் மற்றும் கிள்ளானில் கடந்த
வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் போதைப் பொருள்
விநியோகிப்பாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று உள்நாட்டு ஆடவர்கள்
கைது செய்யப்பட்டனர்.

விடியற்காலை 1.40 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை
மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் 32 முதல் 61 வயது வரையிலான
அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக
அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கமாருடின் முகமது ஜின்
கூறினார்.

வீடு அல்லது கடையில் போதைப் பொருளை பத்திரப்படுத்தி வைத்து
பின்னர் உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்வது இந்த கும்பலின்
வழக்கமாக பாணி எனக் கூறிய அவர், கைது செய்யப்பட்ட மூவரும்
இக்கும்பலின் ஒருங்கிணைப்பாளராகப் போதைப் பொருள்
விநியோகிப்பாளராக மற்றும் கடையின் பராமரிப்பாளராக வேலை செய்து
வந்தவர்களாவர் என்றார்.

இந்த சோதனை நடவடிக்கைளில் 52 கிலோ மெத்தம்பெத்தமின், 20 கிலோ
கெத்தாமின், 154.3 கிலோ எக்ஸ்டசி போதைப் பொருள்கள்
கைப்பற்றப்பட்டன. இந்த போதைப் பொருளின் மதிப்பு 1 கோடியே 44
லட்சம் வெள்ளி என மதிப்பிடப்படுவதோடு இந்த போதைப் பொருளை
861,335 போதைப் பித்தர்கள் பயன்படுத்த முடியும் எனறார் அவர்.

சபா, சரவா ஆகிய மாநிலங்களுக்கும் இக்கும்பல் போதைப் பொருளைக்
கடத்தி வந்ததாக கூறிய அவர், அதிகாரிகளின் சோதனையிலிருந்து
தப்புவதற்காகத் துணி துவைக்கும் சோப்பு வடிவில் போதைப் பொருளைப்
பொட்டலமிட்டு கூரியர் எனப்படும் துரித பொருள் பட்டுவாடா சேவையின்
மூலம் அவ்விரு மாநிலங்களுக்கு அனுப்பி வந்துள்ளனர் என்றார்.

இக்கும்பலிடமிருந்து போதைப் பொருள் தவிர்த்து 400,000 வெள்ளி
மதிப்புள்ள பி.எம்.டபள்யூ, லெக்சஸ், வியோஸ் உள்ளிட்ட நான்கு கார்கள்,
நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :