SELANGOR

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைச் சேகரிப்பதற்காக 500 பெட்டிகள் விநியோகம் – கிள்ளான் மாநகராட்சி

ஷா ஆலம், ஜூலை 17: மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைச் சேகரிப்பதற்காக 500 பெட்டிகளை வடக்கு கிள்ளான் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கிள்ளான் மாநகராட்சி (MPK), சனிக்கிழமையும் நேற்று வழங்கியது.

வீட்டுக்கு வீடு மறுசுழற்சி திட்டத்தின் கீழ் பண்டார் புக்கிட் ராஜா மற்றும் அமான் பெர்டானா ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிப்பதற்காகப் பெட்டிகள் வழங்கப்பட்டன என சுற்றுச் சூழல் சேவை துறையின் இயக்குனர் கூறினார்.

“மொத்தம் 355 பெட்டிகள் பண்டார் புக்கிட் ராஜாவிலும் மற்றும் 145 பெட்டிகள் அமான் பெர்டானாவிலும் கிள்ளான் மாநகராட்சியின் மறுசுழற்சி குழு மற்றும் இரண்டு வீட்டமைப்பு ஒப்பந்ததாரர் குழுவால் விநியோகிக்கப்பட்டன.

“குடியிருப்பாளர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வழங்கப்பட்ட பெட்டியில் சேகரித்து அடுத்த நடவடிக்கைக்காக ஒப்பந்ததாரர் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்” என்று சைரீசல் அகமட் சைனுடின் கூறினார்.

இந்தத் திட்டம் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.


Pengarang :