ANTARABANGSA

சிங்கையின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பதவி விலகல்

சிங்கப்பூர், ஜூலை 17- நாடாளுமன்ற சபாநாயகர் உள்பட இரு ஆளும்
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாகச் சிங்கப்பூர்
பிரதமர் லீ சியேன் லுங் கூறினார். கட்சியின் தரத்தைக் கட்டிக்காப்பதற்கு
இந்நடவடிக்கை அவசியமானதாகும் என அவர் சொன்னார்.

கடந்த 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக அதாவது
1959ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் ஆளும் மக்கள்
செயல்கட்சியின் (பிஏபி) உறுப்பினர்கள் பதவி விலகுவது சிங்கப்பூரில்
அரிதாக நிகழும் சம்பவமாகும்.

சபாநாயகர் டான் சுவான் ஜின் தனது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக
பதவி விலகுவதாகவும் குடும்பத்தைக் கவனிப்பதற்கு ஏதுவாக
அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் லீ
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி விலகலுக்கு பிரதமர்
அலுவலகம் காரணம் கூறவில்லை. செங் லி ஹூய் என்ற அந்த
உறுப்பினர் கடந்த 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து
வந்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு செங்குடன் தொடர்பு
கொள்ளமுடியவில்லை. அவரின் பேஸ்புக் பக்கமும் நீக்கப்பட்டு விட்டது.

சிங்கப்பூர் அண்மைய காலமாகப் பல அரசியல் சரிவுகளைச் சந்தித்து
வருகிறது. அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும்
ஹோட்டல் தொழிலதிபர் ஓங் பெங் செங்கும் உயர்நிலையிலான ஊழல்
புகார் தொடர்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு
எதிரான விசாரணை தொடர்பில் அவ்விருவரும் இதுவரை
கருத்துரைக்கவில்லை.

தனது மைக்ரோபோன் அடைக்கப்படாத நிலையில் சக நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவரை கடுமையாகச் சாடும் காணொளி ஒன்று சமூக
ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து சபாநாயகர் டான் தனது பதவியைத்
துறந்துள்ளார்.


Pengarang :