NATIONAL

சேவை துறையில் நிரந்தரப் பணியிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 காலியிடங்கள்

ஜொகூர் பாரு, ஜூலை 17 – சேவை துறையில் நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15,000 காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பொது சேவை துறையின் (எஸ்பிஏ) தலைவர் டான்ஸ்ரீ சைனல் ரஹீம் செமன் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 40,000 ஒப்பந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைகள், அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளைப் பொறுத்து காலியான இடங்களின் எண்ணிக்கை அமையும் என்றார்.

“துறைகள், அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு ஏற்ப காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடும். அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறுவதால் ஆண்டுதோறும் 15,000 நிரந்தரப் பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 முதல் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் காலியிடங்களை நிரப்புகிறோம்,” என்று அவர் ஜொகூர் பாருவின் பொது சேவை துறையின் நேர்காணல் மையத்தை நகர்ப்புற மாற்றம் மையத்தில் (UTC) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

“புதிய பதவிகளை அறிமுகப்படுத்தவது அந்தந்த அமைச்சகங்களைப் பொறுத்தது. உதாரணமாக, ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரப் பணியிடங்களுக்கு நியமனம் செய்வது போன்ற பிரச்சனைகளால் சில அமைச்சகங்களுக்குப் புதிய பதவிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் அமைச்சகம் திட்டமிடுவதைப் பொறுத்தது, ”என்று அவர் மேலும் கூறினார்.

ஆறு நேர்காணல் அறைகளைக் கொண்ட ஜொகூர் பாரு பொது சேவை துறையின் மையம், ஆண்டு முழுவதும் நேர்காணலுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைப் பெற்றதாக அவர் கூறினார்.

 

– பெர்னாமா


Pengarang :