NATIONAL

மாநில நிலையில் நியமனம் பெறும் செனட்டர்களுக்கான கோட்டாவை அதிகரிக்க முடியும்- சபாநாயகர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 18- மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்
செனட்டர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இரண்டிலிருந்து மூன்றாக
அதிகரிக்க முடியும் என்று மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் வான்
ஜூனைடி வான் துவாங்கு ஜாபர் கூறினார்.

மாநிலங்களிலிருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் செனட்டர்களின்
எண்ணிக்கை இரண்டாக இருக்க வேண்டும் என்றும் அதே சமயம் அதனை
மூன்றாக அதிகரிக்கலாம் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் 45(1)(ஏ)
பிரிவு கூறுகிறது என்று அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் முடிவெடுப்பது அரசாங்கத்தைப் பொறுத்ததாகும்.
தற்போது ஒரு மாநிலத்திற்கு இரு செனட்டர்கள் வீதம் மொத்தம் 26
உறுப்பினர்கள் அவையில் இருக்கின்றனர். மேலும் 44 செனட்டர்கள்
மாட்சிமை தங்கிய பேரரசரால் நியமிக்கப்படுகின்றனர் என்று அவர்
தெரிவித்தார்.

இங்கிலாந்தின் பிரபுத்துவ சபையைப் போல் நாமும் மேலும் ஒரு நியமன
உறுப்பினரைக் கொண்டிருக்கலாம். உறுப்பினர்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதால் பிரச்சனை எதும் எழப்போவதில்லை என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மேலவை சபாநாயகருடனான
2023ஆம் ஆண்டிற்கான முதலாவது கலந்துரையாடல் நிகழ்வின் போது
அவர் இதனைக் கூறினார்.

மேலவையில் தங்களின் பங்கினை அதிகரிப்பதற்கு ஏதுவாக
மாநிலங்களைப் பிரதிநிதிக்கும் செனட்டர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை
தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :