பிரதமர் வழங்கிய அங்கீகாரத்திற்கு நன்றி- தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்- அமிருடின்

சபாக் பெர்ணம், ஜூலை 18- அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வென்றால் தான் மந்திரி புசாராக நீடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்புக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தை நடப்பு அரசாங்கம் தொடர்ந்து வழி நடத்துவதற்கு ஏதுவாக இந்த தேர்தலில் வெற்றியை ஈட்டுவதற்கு தாங்கள் கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நன்றி. ஆயினும், நாம் கடுமையாக உழைத்து மாநிலத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக தலைவர்களிடையே கருத்திணக்கம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எது எப்படி இருப்பினும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவதுதான் மிக முக்கியம் என அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியை உறுதி செய்வதற்கு நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று இன்று இங்கு நடைபெற்ற செந்தோஹான் அக்ரோ மடாணி வேளாண் திட்ட தொடக்க நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரான அமிருடின் மந்திரி புசாராக தொடர்ந்து நீடிப்பார் என்று பிரதமர் இந்நிகழ்வில் உரையாற்றிய போது கூறியிருந்தார்.


Pengarang :