SELANGOR

மேரு தொகுதியில் அடிப்படை வசதிகளைச் சீரமைக்கும் பணி 90 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், ஜூல 21- மேரு தொகுதியில் கடந்த ஐந்தாண்டு காலத்தில்
அடிப்படை வசதிகளைச் சீரமைக்கும் பணி 90 விழுக்காடு வரை
பூர்த்தியடைந்துள்ளது.

சாலைகள் மற்றும் வடிகால்களை தரம் உயர்த்துவதும் அந்த சீரமைப்பு
பணிகளில் அடங்கும் என்று மேரு தொகுதியின் நடப்பு உறுப்பினரான
முகமது ஃபக்ருள்ராஸி மொக்தார் கூறினார்.

மோசமான நிலையில் இருந்த சாலை மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் ஏறக்குறைய சீர் செய்யப்பட்டு விட்டன. இந்த
திட்டங்கள் யாவும் மாநில அரசின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இன்னும்
முடிக்கப்படாத திட்டங்கள் ஒப்பந்ததாரர் அல்லது தனிநபர்களால்
மேற்கொள்ளப்பட்டவையாகும் என அவர் விளக்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டப்
பின்னர் தாம் முன்னுரிமை அளித்த நான்கு முக்கிய பிரச்சனைகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் ஒன்றாகும் என அவர்
தெரிவித்தார்.

அந்நிய நாட்டினரின் படையெடுப்பைக் கட்டுப்படுத்துவது, வெள்ளத்தைத்
தடுப்பது மற்றும் இத்தொகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சனையாக
இருந்து வரும் குப்பை மேலாண்மைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றில்
தாம் கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் சொன்னார்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் வெள்ளத்தைக்
கட்டுப்படுத்தியதுதான். முன்பு ஆண்டுக்கு ஆறுக்கும் மேற்பட்ட தடவை
வெள்ளம் ஏற்படும் இப்போது ஒரு முறைதான் வெள்ளம் ஏற்பட்டுள்ளது
என்றார் அவர்.

வெள்ளத்தைத் தடுப்பதில் தனியார் நிறுவனங்களும் மிகுந்த ஒத்துழைப்பை
நல்கியுள்ளன. குறிப்பாக, வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு 5.4 கோடி வெள்ளியை வழங்கிய டோப் குளோவ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :