NATIONAL

வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும எட்டே நாட்கள் – வேட்பாளர்களை அறிவிக்கத் தயாராகும் அரசியல் கட்சிகள்

கோலாலம்பூர், ஜூலை 21- சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு,
கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் வேட்பு
மனுவைத் தாக்கல் செய்ய இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள
நிலையில் பரபரப்புமிக்க இந்த தேர்தலுக்குத் தயாராகும் வண்ணம் தங்களின்
வேட்பாளர்களை அறிவிக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே
குடையின் கீழ் இணைந்துள்ள நாட்டின் இரு பெரும் அரசியல்
ஜாம்பவான்களான பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்
கூட்டணி, பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேட்பாளர்களை
அறிவிப்பதற்குத் தயாராகி வருகிறது.

இந்த ஆறு மாநிலங்களில் மொத்தம் உள்ள 245 தொகுதிகளில் 45
விழுக்காட்டு இடங்களில் பாரிசான் நேஷனல் போட்டியிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறும்
தேர்தலில் தங்கள் வேட்பாளர்களைக் களமிக்கப் போவதில்லை என்று
பாரிசான் பங்காளிக் கட்சிகளான மஇகாவும் மசீசவும் அறிவித்துள்ள
நிலையில் அனைத்து தொகுதிகளிலும் அம்னோ மட்டுமே தனது
வேட்பாளர்களை நிறுத்துகிறது.

நாட்டின் மிகப் பழைமையான அரசியல் கட்சியான அம்னோ இத்தேர்தலில்
போட்டியிடவுள்ள 100 வேட்பாளர்களின் பட்டியலை இன்று மாலை
கோலாலம்பூர் வர்த்தக மையத்தில் வெளியிடவுள்ளது.

அதே சமயம், பக்கத்தான், குறிப்பாகப் பிகேஆர் கட்சி இம்மாதம் 22ஆம் தேதி
சனிக்கிழமை ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெறும்
நிகழ்வில் தனது 59 வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவிருக்கிறது.

எனினும், பக்கத்தான் கூட்டணியான ஜசெக வேட்பாளர் பட்டியலை
அறிவிப்பதற்கான தேதியை இன்னும் வெளியிடவில்லை. கடந்த 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 48 தொகுதிகளிலும் ஜசெக தனது
வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின் போது பினாங்கு மாநிலத்தில் 19 இடங்களிலும்
சிலாங்கூர் மாநிலத்தில் 16 இடங்களிலும் நெகிரி செம்பிலானில் 11
இடங்களிலும் கெடாவில் இரு இடங்களிலும் ஜசெக தனது
வேட்பாளர்களை நிறுத்தியது.

பக்கத்தான் கூட்டணியின் மற்றொரு உறுப்புக் கட்சியான பார்ட்டி அமானா
ராக்யாட் (அமானா) 31 முதல் 34 வரையிலான வேட்பாளர்களின்
பெயர்களை வரும் 24ஆம் தேதி திங்கள்கிழமை வெளியிடவுள்ளது.

எனினும், இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்வு எங்கு, எப்போது நடைபெறும்
என்று கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சாபு இன்னும்
அறிவிக்கவில்லை.


Pengarang :