SELANGOR

பிரசுரங்கள் வழி வாக்காளர்களிடம் அறிமுகத்தை ஏற்படுத்த புக்கிட் மெலாவத்தி வேட்பாளர் தீபன் நடவடிக்கை

கோல சிலாங்கூர் ஜூலை 31- புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பக்கத்தான்
ஹராப்பான் சார்பில் போட்டியிடும் தீபன் சுப்பிரமணியம் வாக்காளர்கள்
மத்தியில் அறிமுகத்தைத் ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரசுரங்களை
விநியோகித்து வருகிறார்.

நேற்று காலை சுங்கை பூலோ பொது சந்தைக்கு வருகை புரிந்த அவர்,
பொது மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதோடு தன்னைப் பற்றிய
விபரங்கள் அடங்கிய பிரசுரங்களையும் அவர்களிடம் வழங்கினார். இந்த
பயணத்தின் போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜூல்கிப்ளி அகமதுவும் உடனிருந்தார்.

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் கோல
சிலாங்கூர் வட்டார இளைஞர்கள் எதிர்நோக்கி வரும் வேலை வாய்ப்பு,
சமூக நலன், வர்த்தக வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைளுக்குத் தீர்வு
காணவுள்ளதாக தீபன் முன்னதாக வாக்குறுதியளித்திருந்தார்.

மேலும், இத்தொகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது,
இணைய சேவையில் காணப்படும் குறைபாடுகளைக் களைவது, பொது
போக்குவரத்தை குறிப்பாக எம்.ஆர்.டி. சேவையை கோல சிலாங்கூர் வரை
விரிவுபடுத்துவது ஆகிய திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என அவர்
தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமின்றி கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள மீனவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவது, ஆறுகள் மாசடைவதைத்
தடுப்பது, ஆகியவை மீதும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அவர்
சொன்னார்.

எதிர்வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில புக்கிட்
மெலாவத்தி தொகுதியில் தீபன் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நோராஸ்லி யாஹ்யாவிடமிருந்து நேரடிப் போட்டியை எதிர்நோக்குகிறார். இந்த தொகுதியில் மொத்தம் 37,956 வாக்காளர்கள் உள்ளனர்.


Pengarang :