SELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் பூக்கடைகளுக்குப் பிரத்தியேக இடம்- கவுன்சிலர் ராமு தகவல்

ஷா ஆலம், ஆக 1- ஷா ஆலம் மாநகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும்
பகுதியான செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் பூக்கடைகளுக்கென
பிரத்தியேக இடத்தை ஒதுக்கித் தர ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு
செய்து வருகிறது.

பிரிக்பீல்ட்ஸ் மற்றும் கிள்ளானில் உள்ளதைப் போல் ஒரே இடத்தில்
சகல வசதிகளுடன் கூடிய பூ வியாபார மையத்தை உருவாக்கும்
நோக்கில் இந்த திட்டத்தை மாநகர் மன்றம் முன்னெடுத்துள்ளதாக மாநகர்
மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

இந்த பிரத்தியேகப் பூ வியாபார மையத்திற்கான பொருத்தமான இடத்தை
அடையாளம் காணும் பணியில் மாநகர் மன்றம் தற்போது ஈடுபட்டு
வருகிறது. ஸ்ரீ மூடா பிளாசா மற்றும் ஸ்ரீ மூடா பாசார் மோடன் எனப்படும்
மாநகர் மன்றத்தின் பெரிய மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு அருகே இந்த
பூ வியாபார மையத்தை அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு
வருகிறது என்று அவர் சொன்னார்.

அண்மையில் பூக்கடைகளுக்கான ஓரிட மையத்தை அமைப்பதற்கு
சாத்தியம் உள்ள இடங்களை மாநகர் மன்ற அதிகாரிகளுடன்
பார்வையிட்டப் பின்னர் ராமு சிலாங்கூர் இன்று பத்திரிகையிடம்
இதனைத் தெரிவித்தார்.

தொடக்கத்தில் தற்காலிக அடிப்படையில் இப்பூக்கடைகளுக்கு இடம்
ஒதுக்கித் தரப்படும். இந்த தற்காலிக கடைகளுக்கு இடம் பெயரும்
வியாபாரிகளுக்கு பின்னர் அமைக்கப்படும் நிரந்தர இடத்திற்கு மாற்றலாக
வாய்ப்பு வழங்கப்படும்.

மின்சாரம், நீர் மற்றும் அப்படை வசதிகளுடன் 20 கடைகள்
நிர்மாணிக்கப்படும். இந்த கடைகளில் உள்நாட்டினருக்கு மட்டுமே வாய்ப்பு
வழங்கப்படும் எனவும் ராமு குறிப்பிட்டார்.

தற்போது ஸ்ரீ மூடாவில் அனைத்து கடைத் தொகுதிகளிலும் நம்மவர்கள்
பரவலாக நடை பாதைகளில் பூ மற்றும் மாலை வியாபாரத்தை
மேற்கொண்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றியும் பிறருக்கு
அசௌர்கயத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த வியாபார
நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இந்த வியாபாரத்திற்குத்
தனி அந்தஸ்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி
முன்னெடுக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :