SELANGOR

சிலாங்கூரில் பக்கத்தான்- பாரிசான் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி

ஷா ஆலம், ஆக 13– பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய கட்சிகளைக் கொண்ட ஒற்றுமை அரசாங்கம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் 34 இடங்களில்
தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதை தேர்தல் ஆணையம் நேற்றிரவு அதிகாரபூர்வ முடிவுகள் காட்டுகின்றன.

உலு கிளாங், தாமான் மேடான் மற்றும் கோம்பாக் செத்தியா போன்ற பரபரப்பானத் தொகுதிகள் உட்பட எஞ்சிய 22 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல்
வென்றது. சிலாங்கூரில் மொத்தம் 56 தொகுதிகள் உள்ளன.

உலு கிளாங்கில் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி ஹராப்பான் வேட்பாளர் ஜுவாய்ரியா
ஜூல்கிப்லியை 1,617 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

இதற்கிடையில், அஃபிப் பஹார்டின் மற்றும் ஹில்மான் இடாம் ஆகியோர் முறையே 30
மற்றும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் இதர இரு தொகுதிகளில் வென்றனர்.

நள்ளிரவுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் பக்காத்தான்
ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி, ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி
அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தை அமைப்பது குறித்து மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அலுவலகத்தின் ஒப்புதலுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகச் சொன்னார்.

மேன்மை தங்கிய சுல்தான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அறியப்படுகிறது. நாங்கள் வென்ற இடங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நடைமுறை இப்போது உள்ளது. பின்னர் அது மாநில ஆட்சியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.

பின்னர், அரண்மனை மாநில ஒற்றுமை அரசாங்கத் தலைவர் அல்லது பிரதமருக்கு
அதிகாரப்பூர்வக் கடிதத்தை அனுப்பும். அதுதான் நடைமுறை. எனவே அதன்படி நாங்கள்
காத்திருப்போம் என்றார் அவர்.


Pengarang :