SELANGOR

மூன்று மாநிலங்களைத் தற்காப்பதில் கருத்திணக்கமும் வலுவான தேர்தல் இயந்திரமும் பேருதவி- கோபிந்த் சிங் கூறுகிறார்

கிள்ளான், ஆக 13- மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும்
பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுவதற்குத் தலைவர்களுக்கிடையிலான வலுவான கருத்திணக்கமே காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் காலத்தில் தேர்தல் இயந்திரம் மேற்கொண்ட இடைவிடாத
பிரச்சாரம மற்றும் இன வேறுபாடின்றி அனைத்து நிலையிலான மக்களும்
வழங்கிய ஆதரவு ஆகியவையும் இந்த வெற்றிக்கு அடித்தளமாக
அமைந்ததாக சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ
கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த
அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்
என்று ஹராப்பான்- பாரிசான் வெற்றியை முன்னிட்டு நேற்றிரவு இங்கு
நடைபெற்ற செய்தியாளர் அவர் தெரிவித்தார்.

தங்கள் கட்சியைச் சேர்ந்த புதுமுக வேட்பாளர் அடைந்த வெற்றி
பெருமிதம் அளிக்கும் வகையில் உள்ளதாக அமானா கட்சியின் சிலாங்கூர்
மாநிலத் தலைவர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஸ்ரீ செர்டாங் தொகுதியில் அபாஸ் அஸ்மி தாமான் டெம்ப்ளர் தொகுதியில்
அன்ஃபால் சாஹரி, பத்து தீகா தொகுதியில் டேனியல் அல் ரஷிட்
ஹருண், மேரு தொகுதியில் சித்தி மரியம் அப்துல் ரஷிட் ஆகியோர்
பெற்ற வெற்றியை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, மாநிலத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தேசிய
முன்னணி தனது செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்குரிய
வாய்ப்பு கிட்டியுள்ளதாகச் சிலாங்கூர் மாநில அம்னோ துணைத் தலைவர்
டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

தேசிய முன்னணி எழுச்சி பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக இது
விளங்குகிறது. இதற்கு முன்னர் நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். இந்த
புதிய கூட்டணி புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.


Pengarang :