NATIONAL

அந்நிய நாட்டுப் பெண்கள் கடத்தல்- இருவர் கைது

கோலாலம்பூர், ஆக 16- பிணைப்
பணத்திற்காக வெளிநாட்டுப் பெண்களைக்
கடத்திய நபர்கள் சிலாங்கூர், கிள்ளான்
நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில்
கைது செய்யப்பட்டனர்.

பொழுது போக்குவதற்காக வெளியில்
சென்றபோது உள்ளூர் ஆடவர்களால் தன் சகாக்கள் இருவர் கடத்தப்பட்டதாகப்
பூச்சோங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த
புகாரின் பேரில் 31 மற்றும் 35 வயதுடைய
இரு ஆடவர்களும் பிற்பகல் 1.30
மணியளவில் கிள்ளான் பகுதியில் கைது
செய்யப்பட்டதாகச் செர்டாங் மாவட்டக்
காவல்துறைத் தலைவர் ஏசிபி
ஏ.ஏ.அன்பழகன் கூறினார்.

தனது இரு சகாக்களும் கண்களும் கை,
கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடக்கும்
புகைப்படத்தை விசாட் செயலி மூலம்
புகார்தாரருக்கு அனுப்பிய கடத்தல்காரர்கள்
அவர்களை விடுவிக்க 20,000 வெள்ளியை
பிணைப்பணமாகக் கேட்கப்பட்டதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு
பொழுதுபோக்கு மையத்தில் பொழுதைக்
கழிக்கும் போது சந்தேக நபருடன் அந்த
பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டதும், அப்போது அந்த
சந்தேக நபரின் தொலைபேசி எண்ணை
அப்பெண் பெற்றதும் முதற்கட்ட
விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது
என்றார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான்
வட்டாரத்தில் போலீசார் நடவடிக்கை
மேற்கொண்டு இரண்டு சந்தேக நபர்களையும்
கைது செய்தனர் என்று அவர் நேற்று இரவு
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூரைச் சேர்ந்த இரு சந்தேக
நபர்களுக்கும் முறையே இரண்டு மற்றும்
மூன்று குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர்
என்று அன்பழகன் கூறினார்.

அவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி
முதல் இன்று வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,
கடத்தல் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 365/385 பிரிவின் கீழ் அவர்கள்
மீது குற்றஞ்சாட்டப்படும் எனக் கூறினார்.


Pengarang :