NATIONAL

பிரதமரை மிரட்டியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

கோலாலம்பூர், ஆக 29 – பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமை முகநூலில் மிரட்டி
அவமதித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
செய்யப்பட்டதை போலீசார்
உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாற்பத்தோரு வயதான அந்த உள்ளூர் நபர்
நேற்று முன்தினம் மாலை 3.20 மணியளவில்
கெடா மாநிலத்தின் பீடோங்கில் உள்ள
தாமான் டேசா புடிமானில் இடத்தில் கைது
செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்
புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ
முகமது சுஹைலி முகமது

ஜெய்ன் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து புகார் கிடைத்ததைத்
தொடர்ந்து உடம்புப்பிடி பணியாளரான
அந்நபரை கோல மூடா மாவட்ட காவல்துறை
தலைமையகத்தைச் சேர்ந்த குழு கைது
செய்ததாக அவர் சொன்னார்.

அந்த சந்தேக நபர் கடந்த 26ஆம் தேதி
சனிக்கிழமை ‘ஜோஜெபட் தாஜூடின்’ என்ற
தனது முகநூல் கணக்கின் வாயிலாக அந்த
மிரட்டல் செய்தியை எழுதியுள்ளார் என்று
நேற்று புக்கிட் அமானில் நடந்த சிறப்பு
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான மூன்று
குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்த நபர்
விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று முதல்
நான்கு நாட்களுக்கு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
எனவும் அவர் சொன்னார்.

இதற்கிடையில், பாஸ் கட்சித் தலைவர்
டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அண்மையில்
ஜோகூரில் ஆற்றிய உரையில் 3ஆர்
விவகாரங்களைத் (மதம், ஆட்சியாளர்கள்
மற்றும் இனம்) தொட்டதாகக் கூறப்படுவது
குறித்து கேட்டபோது, ​​இதன் தொடர்பில்
வாக்குமூலம் பதிவு செய்ய விரைவில் அவரை
போலீசார் அழைப்பார்கள் என்று முகமது
சுஹைலி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் 1948ஆம் ஆண்டு
நிந்தனைச் சட்டத்தின் 4 (1)வது பிரிவு மற்றும்
1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும்
பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ்
போலீசார் விசாரணை அறிக்கையைத்
திறந்துள்ளனர் என்றார் அவர்.


Pengarang :