NATIONAL

சாலை விபத்தில் குழந்தை உள்பட இருவர் மரணம்- பாகோவில் சம்பவம்

மூவார், செப் 5- இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார்
சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை
உள்பட இருவர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் வடக்கு- தெற்கு
நெடுஞ்சாலையின் 144.4வது கிலோ மீட்டரில் பாகோ அருகே நேற்று
அதிகாலை 3.10 மணியளவில் நிகழ்ந்தது.

இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்த நிலையில் பின்னால் வந்த
மற்றொரு மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதாக மூவார் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ராய்ஸ முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

அச்சமயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்த கார் ஒன்று
சாலையில் கிடந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதித்தள்ளியப்
பின்னர் கட்டுபாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் பாய்ந்தது
என்று அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்த வேளையில் காரிலிருந்து ஆண் குழந்தை மூவார் சுல்தானா
ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் அதே மருத்துவமனையில்
சிகிச்சைப் பெற்று வருவதாக கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில்
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்தப் பின்னர் பாகோ, புக்கிட்
காம்பிர், தங்காக் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 18
உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்
பணிகளை மேற்கொண்டதாக பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி அஸாரிஸாம் முக்ரி கூறினார்.


Pengarang :