NATIONAL

ஹாடி அவாங் மீதான விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் தயாராகும்- துணை ஐ.ஜி.பி. தகவல்

கோலாலம்பூர், செப் 5- மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து
கேள்வியழுப்பும் வகையிலான கருத்தை வெளியிட்டது தொடர்பில் பாஸ்
கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மீது நடத்தப்பட்டு
விசாரணை ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

அரச மலேசிய போலீஸ் படையின் நிலையான நிர்வாக நடைமுறையின்
கீழ் (எஸ்.ஒ.பி.) இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர்
புகார்கள் மீதான விசாரணை ஏழு நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று
துணை தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப்
கான் மைடின் பிச்சை கூறினார்.

விசாரணை அறிக்கையைத் தயார் செய்வது போலீசாரின் கடமையாகும்.
பின்னர் அது மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர்
அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின்
வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இங்குள்ள பாஸ்
கட்சியின் தலைமையகத்தில் ஹாடி அவாங்கின் வாக்குமூலத்தைப் பதிவு
செய்தனர்.

அந்த விசாரணை குறித்து கருத்துரைத்த ஆயோப் கான், போலீசார்
முன்வைத்த 24 கேள்விகளில் 5 கேள்விகளுக்கு மட்டுமே ஹாடி அவாங்
பதிலளித்ததாகக் குறிப்பிட்டார். இதர கேள்விகளுக்கு நீதிமன்றத்தில்
பதிலளிக்கப்படும் என போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர்
சொன்னார்.

ஹாடி அவாங்கிற்கு எதிராக நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவு மற்றும்
தகவல் தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ்
தாங்கள் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாகப் புக்கிட் அமான்

குற்றப்புலானய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி
முகமது ஜைன் கடந்த மாதம் 28ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :