NATIONAL

ஹாராம் கருத்து தொடர்பில் மொஹிடின் யாசினுக்கு எதிராக போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், செப் 5- பூலாய் நாடாளுமன்ற
இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்
வேட்பாளர் சுஹைசான் கையாட்டுக்கு
வாக்களிப்பது ஹாராம் (பாவம்) என்று
கூறியது தொடர்பில் டான்ஸ்ரீ மொஹிடின்
யாசினுக்கு எதிராக போலீஸார் கடந்த
சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.

பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் பதட்டத்தை
உருவாக்கும் நோக்கில் இத்தகைய கருத்தை
வெளியிட்டது தொடர்பில் பெரிக்கத்தான்
நேஷனல் தலைவருமான அவர் மீது குற்றவியல்
சட்டத்தின் 505 (பி) வது பிரிவு மற்றும்
1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும்
பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு
ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

மொஹிடினுக்கு எதிராக இங்குள்ள காவல்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்
தொடர்ந்து இதன் தொடர்பில் புக்கிட் அமான்
வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப்
பிரிவு விசாரணையை மேற்கொண்டு
வருகிறது என்று அவர் கூறினார்.

விரைவில் அவரிடம் (மொஹிடின்)
வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என
ரஸாருடின் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை, ஜோகூர் பாருவில்
உள்ள டத்தாரான் உத்தாமா கெம்பாசில்
நடைபெற்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
உரையாற்றிய மொஹிடின், சுஹைசானுக்கு
வாக்களிப்பது ஹாராம் என்று கூறியதாகக்
கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி உள்நாட்டு
வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப்
காலமானதைத் தொடர்ந்து பூலாய்
நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம்
சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்
நடைபெறுகிறது.

இததேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு
இன்றும் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதியும்
நடைபெறுகிறது.


Pengarang :