NATIONAL

டிங்கி காய்ச்சலால் 2,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

புத்ராஜெயா, செப் 6 – ஆகஸ்ட் 20 முதல் 26 வரையிலான 34வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME34) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 சம்பவங்கள் அல்லது 4.3 சதவீதம் அதிகரித்து 2,349ஆக பதிவாகியுள்ளது. முந்தைய வாரத்தில் 2,248 சம்பவங்கள் பாதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், டிங்கி காய்ச்சல் காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகச் சுகாதார இயக்குனர்-ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

தற்போது டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,277 ஆக உள்ளது அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 41,574 சம்பவங்கள் அல்லது 113.3 சதவீதம் அதிகரித்துள்ளன.

“டிங்கி காய்ச்சலால் மொத்தம் 55 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 22 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது, ” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், 82 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியுள்ளன. அவை சிலாங்கூரில் 51 இடங்கள், கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 22, நெகிரி செம்பிலான், பேராக், கிளந்தான் மற்றும் சபாவில் தலா இரண்டு மற்றும் பினாங்கில் ஒன்று ஆகும்.

– பெர்னாமா


Pengarang :